Frequently Asked Questions

H. கோபாலகிருஷ்ணன், ஜோதிட ஆலோசகர், செல்: 9176347274
(பின்குறிப்பு: இது செய்தித்தாளில் நான் தரும் பதில்கள் - பிரசுரத்திற்குப் பின், பொது நலன் கருதி நான் இந்த தடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.)

திருமண பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

கண்டிப்பாக பார்க்க வேண்டும். சரியாக கணிக்கப்பட்ட பெண் மற்றும் பிள்ளை ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை பரிசீலித்து பொருத்தம் செய்ய வேண்டும். வெறும் நக்ஷத்திர பொருத்தம்(10 பொருத்தம்) மட்டும் பார்த்து செய்வது தவறு.

ஒரு மனிதனின் வாழ்வில், ஆயுள், படிப்பு, உத்யோகம், வருமானம், சொத்து, வாகனம், திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் போன்றவை மிகவும் முக்கியமானவை.

நமது ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் உள்ள 12 ராசிக் கட்டங்கள் ஒவ்வொன்றும் இந்த ஒவ்வொரு விஷயங்களையும் தெளிவாக அறிவதற்கு பயன்படுகிறது.

பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் முதலிய குறிப்புகளைக் கொண்டு. சரியான ரேகாம்சம், அக்ஷராம்சம், அயனாம்சம் மற்றும் சரியான பஞ்சாங்கம் உதவியோடு ஜாதகம் கணிக்கப் பட்டிருக்கவேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு பெண் ஜாதகத்தில் 7 மற்றும் 8ம் இடம் திருமண வாழ்க்கை மற்றும் அதன் நீடிப்பு, ஸ்திரம் இவைகளைக் குறிக்கும். இவை சாதகமாக இல்லையென்றால், பிள்ளை ஜாதகத்தில் அவருடைய ஆயுள் மற்றும், திருமண நீடிப்பு, ஸ்திரம் பற்றிய விவரஙளை 7 மற்றும் 8ம் இடத்தை வைத்தும் அதற்கு ஆதாரமான கிரகங்களின் நிலை கொண்டு ஆராய்ந்து அவை சாதகமாக இருக்குமென்றால் இந்த இருவரின் ஜாதகங்களை இதை போன்று மற்ற இடங்களையும் மற்ற தேவைகளுக்கும் ஆராய்ந்து சாதக பாதங்களை சீர்தூக்கி இணைக்க வேண்டும்.

இப்படி சரியாகப் பொருத்தம் பார்க்காமல் செய்யப்பட்ட பல திருமணங்கள் விவாகரத்து, உயிர் இழப்பு, குழந்தையின்மை, ஒற்றுமையின்மை என்று விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன.

சிலர் "அப்படிப் பார்த்து செய்த திருமணங்கள் கூட விபரீதத்தில் முடிந்திருக்கிறதே என்று கேட்கக்கூடும்". அவர்களுக்கு மீண்டும் தெளிவு படுத்துகிறேன். ஜாதகங்கள் சரியாக கணிக்கப் படாவிட்டால் ஜாதகம் பார்த்தும் பயனில்லை. ஜோதிடர்கள் தவறலாம். ஜோதிட சாஸ்திரம் நிச்சயம் தவறுவதில்லை. எப்படி நோய்களுக்கு தீர்வு காண நல்ல மருத்துவர்கள் இறைவன் அருளால் அமைய வேண்டுமோ, அப்படி நல்ல் ஜோதிடர்களும் ஒருவருக்கு இறைவன் அருளால் அமைய வேண்டும்.

ஜாதகம் என்பது உண்மையா? வெளிநாடுகளில் அப்படி எதுவும் இல்லையே..!

ஜோதிட சாஸ்திரம் உண்மை. அதை சரியாகப் பயன்படுத்துவது இல்லை. வெளிநாடுகளில் சூரிய ராசியை அடிப்படையாக வைத்து ஜோதிடம் பார்கிறார்கள். அவர்களும் நமது ஜோதிட சாஸ்திரத்தை நம்புகிறார்கள்.

நமது வான சாஸ்திர மற்றும் கணித நிபுணர்கள் பாஸ்கரா, பராசரா, வராஹமிஹ்ரா போன்றவர்கள் ஜோதிடக் கலையில் மிகவும் தேர்ந்தவர்கள். அதே போல் மேலை நாட்டு விஞ்ஞானிகள் எய்ன்ஸ்டீன், நியூட்டன் போன்றவர்கள் ஜோதிடக் கலையை கற்றுத் தேர்ந்தவர்கள்.

வெளி நாட்டவர்கள் பிறந்த தேதியை வைத்து ராசிகளை நிர்ணயித்து, ஜோதிடம் பார்த்து வருகிறார்கள். இவைகளை தவிற பெயர் ராசி, கைரேகை போன்றவற்றிலும் அவர்கள் நம்பிக்கை வைத்து பார்த்து வருகிறார்கள்.

ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். யார் ஒன்றை மூட நம்பிக்கை,பொய் என்று கூறி வருகிறார்களோ, அவர்கள் ரகசியமாக தனக்கும் தன் குடும்பத்தாற்கும் அந்த விஷயங்களை பயன்படுத்துகிறர்கள் என்பது அப்பட்டமானஉண்மை. கடவுள்கும்பிடுவதிலும்கூட.

ஜாதகத்தால், எப்படி ஒருவரது எதிர்கால நிகழ்வை உறுதியாகச் சொல்ல முடியும்?

நன்கு கணிக்கபட்ட ஜாதகம் மூலம் நல்ல ஜோதிடர் 95% வரை உறுதியாகப் பலன் சொல்ல முடியும். மீதி 5% இறைவனின் கைகளில் - அவரவர்களின் எண்ணம் போல்.

ஜாதகம் என்பது கணிதம், வான சாஸ்திரம் மற்றும் ஏழாம் அறிவு எனப்படுகிற ESP (Extra Sensory Perception) இவைகளை மையமாகக் கொண்ட்து. நல்ல ஜோதிடர் கணிதத்திலும், கிரகங்களின் நிலைபாடு (ephimeries) போன்றவைகளை கற்று அறிந்து தனது சுய ஒழுக்க தியானப் பயிற்சி மூலம் ESP வல்லமையும் அடைந்திருந்தால் எதிர்கால நிகழ்வுகளை மிகத் துல்லியமாக சொல்ல முடியும்.

சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் ராசி, நவாம்சம், சப்தாம்சம், தசாம்சம், த்வதாம்சம், அஷ்டவர்கம் என்று பல முறைகளில் 12 ராசி கட்டங்களையும், கிரகங்களையும் பிரித்து வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப அலசி ஆராய்வதற்கு வசதியாக பல கட்டங்கள் அமைக்கப் பட்டிருக்கும். அவைகளின் மூலம் ஆயுள், படிப்பு, உத்யோகம், வருமானம், சொத்து, வாகனம், திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் போன்றவைகளை மிகத் துல்லியமாகக் கூற முடியும்.

ஆன்மிகம் என்பது நம்பிக்கை, ஜாதகம் என்பது மூடநம்பிக்கை என்று என் நண்பன் சொல்கிறான். இதில், எது உண்மை?

ஆன்மீகம், ஜோதிடம் மட்டுமின்றி எல்லா சாஸ்திரங்களுக்கும் ஒரு அறிவியல் சார்ந்த விஷயங்களும், பலன்களும் இருக்கின்றன. அவைகளை சரியாக புரிந்து கொண்டு சரியாகப் பயன் படுத்தினால் எதுவும் மூட நம்பிக்கை அல்ல.

ஆன்மீகம் என்பது ஒருவரது ஆன்மா சம்பந்தபட்ட விஷயம். ஜோதிட சாஸ்திரமும் ஒருவருடைய ஆன்மாவை மையப்படுத்தி அவரது முன் ஜன்மம், பிறப்பு, வாழ்வு. இறப்பு, அடுத்த ஜன்மம் போன்றவைகளை அறிவதற்கு நல்ல ஞான திருஷ்டி பெற்ற ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

எப்படி கிரகங்களின் பாதிப்பு பூமியை தாக்குகிறதோ, அப்படியே பூமியில் உள்ள எல்லா ஜீவ ராசிகளையும், பொருட்களையும் பாதிக்கின்றது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும். செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும் போது தீயினால் பாதிப்பு ஏற்படுகின்றது. சூரியனின் வெப்பம் தாக்குகின்றது. சனி கிரகத்தின் சுழற்சி பல கோணங்களில் பூமியை தாக்குகிறது. இவை அனைத்து விஷயங்களும் மனிதனின் உடல் நிலையிலும், மனத்தளவிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்துவது அசைக்க முடியாத உண்மை.

கடவுள் வழிபாட்டைக் கூட சிலர் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும்போதுதான் இறைவனையும், ஆன்மீகத்தையும், ஜோதிடத்தையும் நாடிச் செல்கிறான். அவன் நினைப்பதெல்லாம் நடந்து வசதியாக இருக்கும் போது, ஏதோ தானே இந்த உலைகையெல்லாம் படைத்தது போலவும், அவன் என்றும் அழிய மாட்டான் என்ற கர்வம் போர்த்திய மூட நம்பிக்கையுடன் கடவுளையும், ஆன்மீகத்தையும், ஜோதிட சாஸ்திரத்தையும், தனக்குள்ளே உள்ள பயத்தை வெளிக்காட்டாமல், மற்றவர்களை ஏளனம் செய்து கொண்டிருப்பான்.

பலர், கம்ப்யூட்டர் ஜாதகம் பொய் என்கிறார்களே... அது உண்மையா?

கம்ப்யூட்டர் நிபுணர்கள் ஒரு ஜோதிடர் உதவியுடன் வேண்டிய ப்ரோக்ராம் எழுதிகிறார்கள். அந்த சாஃப்ட்வேர் சரியான அஷ்ராம்சங்களையும், அயனாம்சத்தையும். பஞ்சாங்கத்தையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தால் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் யாரும் தயவுசெய்து அதில் குறிப்பிட்டுள்ள பலன்களையும் பரிகாரங்களையும் நம்ப வேண்டாம். ஏனென்றால் பலன்களும் பரிகாரங்களும் கணிதம், வான சாஸ்திரம் மற்றும் ESP என்கிற ஏழாம் அறிவை உபயோகித்து நல்ல ஜோதிடர்களால் கூறப்பட வேண்டியவை.

கம்ப்யூட்டர் போன்ற கருவிகள் மிக சீக்கிறமாக செயல்படுவதற்கு பயன்படுமே தவிற அவைகளுக்கு நம் கண்களுக்கும், மூளைக்கும் புலப்படாமல், நம் ஆன்மாவினால் மட்டுமே அறியக்கூடிய விஷயங்களையும், உணர்வுகளையும் தெளிவுபடுத்தவோ, விவரிக்கவோ முடியாது.

விஞ்ஞானிகளால் INTUITION, EXTRA SENSORY PERCEPTION, CLAROVOYANCE, MEMORY STORED, HYPNOTISM, FACE READING என்று பலவாறு பெயர் சூட்டப்பட்ட விஷயங்கள் ஆன்மாவை அறிந்துகொண்ட உண்மையான மெய்ஞ்ஞானிகளால் மட்டுமே தெளிவு படுத்த முடியும்.

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்கிறார்களே... இது உண்மையா?

இந்த பழமொழி உண்மையாக இருந்தால், இன்று மூல நக்ஷத்திரத்தில் பிறந்த அத்தனை ஆண்களும் அரசர்களாகவும், அத்தனைப் பெண்களும் தெருவிலும் நின்றிருக்க வேண்டும். சிலர் இதே பழமொழியை ஆனி மூலம் அரசாளும், பின் மூலம்(நான்காம் பாதம்) நிர்மூலம் என்றும் கூறுகிறார்கள். சிலர் மூல நக்ஷத்திர ஆண்கள் ஆதிக்க மனம் உடையவர்களாகவும், மூல நக்ஷத்திர பெண்கள் நிர்மலம் (கள்ளம், கபடம் இல்லாதவர்கள்) என்றும் கருதுகிறார்கள்.

எந்த நக்ஷத்திரமும், எந்த ராசியும் தனித் தன்மையாக நல்லதோ, கெட்டதோ கிடையாது. காலப்போக்கில் அவரவர்கள் தங்களுக்கு தோன்றியவைகளை ஜோதிட சாஸ்திரத்தில் புகட்டி அறியாத மக்களை குழப்பி வருகிறார்கள்.

ஒவ்வொரு சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்திலும், கிரகங்கனின் நிலை, அவை இருக்கும் இடத்தின் ராசி அதிபதியின் இருப்பிடம், அவைகளின் ஆதிபத்யம், அவைகளின் காரகத்துவம், சுபாவம், மற்ற கிரகங்களுடன் நட்பு, பகை, அவைகள் உள்ள பாகைகள், அவைகளின் பார்வை கோணங்கள், தற்போது நடக்கின்ற தசா புக்திகள் மற்றும் தற்போதைய கிரக நிலைகள் போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து ஒரு பலனைக் கூற வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் தனிப்பட்டவருடைய ஜாதகம் தனித் தன்மை வாய்ந்ததாகவும், மற்றவருடைய (தாய், தந்தை, மனைவி, கணவன், குழந்தைகள்) ஜாதகங்களை சார்ந்ததாகவும் இருக்கிறது. அதனால், ஒரு தனிப்பட்டவருடைய ஜாதகத்தை மட்டும் மையமாகக் கொண்டு எந்த தீமையும் மற்றவருக்கு நேராது. இவை அனைத்திலும், ஒரே நேரத்தில் கெடுதியானப் பலன்கள் இருக்குமானால், அசம்பாவிதங்கள் நேர வாய்ப்புண்டு. இவை அனைத்திற்கும் மேலாக. நாம் இறைவனிடத்தில் தூய்மையான பக்தியும், அன்பும் செலுத்துவோமானால் இன்பமாய் வாழலாம்.

செவ்வாய் தோஷம் என்கிற பெயரில் ஆண்-பெண் பலரின் வாழ்க்கை வீணாவதை நேரில் பார்க்கிறோம். உண்மையிலேயே அப்படியோரு தோஷத்தை ஜாதகம் சொல்லி இருக்கிறதா?

இது ஒரு முக்கியமான பொது நலம் கருதிய கேள்வி. செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் சில இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று பொதுப்படையாக சில ஜோதிடர்கள் கூறி நிராகரித்து விடுகிரார்கள். இது மிகவும் தவறு. சரியாக ஒருவருடைய ஜாதகத்தை பரிசீலித்தால், ஏறக்குறைய ஆயிரம் பேரில் ஒருவருக்குத்தான் முழுமையான செவ்வாய் தோஷம் இருக்கும். ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் சிகப்பு நிறம் மற்றும் இரத்தத்துடன் தொடர்புடையது. ஆணின் வீரியத்தையும் தைரியத்தையும் அறிய உதவுகிறது. மருத்துவத்துடன் தொடர்பு படுத்தும் போது இந்த தோஷம் உள்ளவர் Rh நெகடிவ் இரத்தப் பிரிவை கொண்டவராக இருப்பார். எனவே அவரை அதே இரத்தப் பிரிவு கொண்டவருடன் இணைக்கும் பொழுது, அவர்களுக்கு உருவாகும் கரு பெரும்பாலும் அதே இரத்தப் பிரிவை கொண்டதாக இருக்கும். அப்போது தன் தாயிடம் இருந்து கிடைக்கும் இரத்த அணுக்களையும், புரத சத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளும். மாறாக ஒருவர் Rh நெகடிவாகவும் மற்றவர் Rh பாசிடிவாகவும் இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை தாயின் இரத்தப் பிரிவுக்கு எதிராக இருந்தால், குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து நேரக்கூடும். எனவே, செவ்வாய் தோஷம் என்று சந்தேகம் இருந்தால், மற்ற குடும்ப விஷயங்கள் ஒன்று பட்டால், இருவருக்கும் இரத்தப் பிரிவு பரிசோதனை செய்து தாராளமாகத் திருமணம் செய்யலாம். ஏனென்றால் தற்போது மருத்துவத்துறையில் கருவில் இருக்கும் Rh பாசிடிவ் குழந்தை, Rh நெகடிவ் தாயினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு உபயோகத்தில் உள்ளது. பொது நலம் கருத்தில் கொண்டு நான் இது தொடர்பான நோயின் பெயரையும், மருந்தின் பெயரையும் குறிப்பிடவில்லை.

நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். நிச்சயம் அவளைத்தான் திருமணம் செய்வேன். ஜாதகம் பார்த்து `பொருத்தம் இல்லை' என்று ஒரு நிலை வராமல் இருக்க, ஜாதகம் பார்க்காமலேயே திருமண்ம் செய்யலாம் என இருவரும் நினைக்கிறோம். நாங்கள் அப்படிச் செய்யலாமா?

உங்களுடைய காதல் உடல் சம்பந்தப்பட்டதாக மட்டும் இல்லாமல், உள்ளமும், உயிரும் சம்பந்தப்பட்டதாக இருக்குமானால், எல்லாம் வல்ல இயற்கை/இறைவன் அருள் உங்கள் காதல் திருமணத்திற்கு கிடைக்கும். திருமணத்திற்கு முன் நீங்கள் காதலிப்பது முக்கியம் அல்ல. திருமணத்திற்குப் பின்னும் எந்த சூழ்நிலையிலும் அன்பு மாறாமல் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். இது ஜாதகம் பார்த்து செய்யும் திருமணங்களுக்கும் பொருந்தும்.

வாழ்க்கை என்பது பல ஏற்றத் தாழ்வுகளும், இன்ப துன்பங்களும் நிறைந்தது. அதன் நெலிவு சுளிவுகளை அறிந்து வாழ முயற்சி செய்தால் அனைவரும் இறுதி வரை இன்பமாக வாழலாம்.

ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. அதுவே வாழ்க்கை அல்ல.

"விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி" என்பது ஒரு கவிஞனின் வரிகள்.

நன்றாக கணிக்கப்பட்ட ஜாதகத்தின் மூலம், நமது வாழ்க்கைப் பயணத்தில், பாதையின் மேடு பள்ளங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற் போல் எல்லா உயிரிடத்திலும் அன்பு செலுத்தி, நாம் கவனமாக வாழக் கற்றுக் கொண்டோமானால் வாழ்க்கைப் பயணம் இனிதாக எல்லோருக்கும் அமையும்.

என் மகள் அடிக்கடி நோய் வந்து படுக்கையில் படுத்து விடுகிறாள். இதனாலேயே அவளுக்கு வரும் வரன் எல்லாம் தள்ளிப் போகிறது. ஜாதக ரீதியாக அவளது நோய் குணமாக நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கேள்விக்கு பொதுப்படையாகவோ, மேலெழுந்தவாரோ பதில் கூறுவது சரியல்ல. எந்த விதமான நோய் என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. மேலும், அது மன நிலை தொடர்பானதா, உடல் தொடர்பானதா அல்லது மன நிலையால் உடல் பாதிக்கப்படுகறதா என்பதை அவரது ஜாதகத்தை பரிசீலித்தப் பிறகே, தெளிவாகக் கூற முடியும்.

அவரது ஜாதகத்தில், 1, 4, 5, 6, 8 மற்றும் 12ம் இடங்களை எந்தெந்த கிரகங்கள் தொடர்பு கொண்டுள்ளது என்று அறிந்து, இது எந்தவிதமான நோய் என்று மருத்துவர்கள் கூறுவதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திருமணம் தள்ளிப் போவதற்கு 7ம் இடத்தையும் அது தொடர்பான கிரக நிலைகளையும் பரிசீலிக்க வேண்டும்.

இதன் பிறகு, உங்கள் குல, மத வழக்கப்படி, உரிய தெய்வங்களை பிரார்த்தனை செய்து உங்கள் வசதிக்கேற்ப தகுந்த பரிகாரங்களை செய்வது நல்லது. இதனுடன் தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது பயனளிக்கும்.

உங்கள் மகள் விரைவில் குணமடைந்து நல்ல வரன் அமைய நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நான் தீவிர அரசியலில் இறங்க நினைக்கிறேன். ஒருவர் அரசியலில் பிரபலமாக வேண்டுமென்றால் ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்க வேண்டும்?

நான் தீவிர அரசியலில் இறங்க நினைக்கிறேன். ஒருவர் அரசியலில் பிரபலமாக வேண்டுமென்றால் ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்க வேண்டும்?

இவை தவிற, சனி மற்றும் ராகு இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சனி தனது சொந்த வீட்டிலோ, உச்சம் பெற்றோ இருந்து, ராகு சுப இடங்களிலோ, மேஷ ராசியிலோ திரிகோண நிலையில் இருத்தல் நல்லது.

வாக்கு சாதுர்யத்திற்கு 2ம் இடமும், தைரியத்திற்கும், மக்கள் தொடர்புக்கும் 3ம் இடமும, புகழும், பலனும் பெறுவதற்க்கு 9, 10 இடங்களும் சிறப்பாக அமைய வேண்டும்.

இவை அனைத்தும் பொதுவான குறிப்புகள். ஒவ்வொரு கிரகங்களின் பாகை(Degree) , மற்ற கிரகங்களுடன் தொடர்பு, நடக்கக் கூடிய தசா புக்திகள், தற்போதைய கிரக நிலை மாற்றங்கள் ஆகியவைகளை பரிசீலித்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

இவைகளுக்கு மேலாக தன்னம்பிக்கையும், எதையும் சந்திக்க தயாரான மன நிலையும், உண்மையாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு இருந்தால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி சில ஜோதிடர்கள் மிகப் பெரிய தொகை கேட்கிறார்கள். உண்மையிலேயே அப்படி அவர்கள் பரிகாரம் செய்தால் நாம் விதியிலிருந்து தப்ப முடியுமா? பாரபட்சமில்லாத உங்கள் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்.

இன்றைய கால சூழ்நிலைக்கு தேவையான இந்த கேள்விக்கு மிக்க நன்றி.

மக்களிடம் தன்னம்பிக்கை குறைந்து, ஜோதிடம் பற்றியும், தெய்வ நம்பிக்கை பற்றியும் சரியான விழிப்புணர்வும், புரிதலும் இல்லாததே இதற்குக் காரணம். இந்த மக்களை சில ஜோதிடர்கள் பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள். இந்த நிலை மருத்துவத் துறை, கல்வித் துறை போன்ற மற்றத் துறைகளிலும் புறையோடி இருக்கிறது.

ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றினாலும் ஒரு கோடி ரூபாய்க்கு யாகம் செய்தாலும் ஆத்மார்தமாகச் செய்தால்தான் பலனை எதிர்பார்க்க முடியும். அவரவர்கள் வசதிக்கேற்றபடி நேர்மையான புரோகிதர்களை வைத்து யாகங்களும், பூஜைகளும், பிரார்த்தனைகளும் செய்தால், செய்பவர்களுக்கும், இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் நன்மை பயக்கும். இதனால் உலகத்தில் எதிர்மறை சக்திகள் குறைந்து, நேர்மறை சக்திகள் கூடும்.

ஒரு தனி மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் எந்தத் தரகரும் தேவையில்லை. உண்மையான பக்தியும், அதை உணர்த்துவதற்க்கு ஒரு உண்மையான, சுய நலம் கருதாத மனிதனும் குருவாக இருந்தால் போதுமானது.

நாம் செய்த கர்ம வினைகளினால் நாம் அனுபவிக்க நேரிடும் துன்பங்களிலிருந்து நிச்சையமாக இறைவன் அருள் நம்மை விடுவிக்க முடியும். எந்த மதமானாலும், எந்த பெயரில் அழைத்தாலும் இயற்கை என்கின்ற இறைவன் ஒருவனே. அதனை வணங்கி எல்லா உயிரிடத்திலும் அன்பு செலுத்தி நாம் அனைவரும் இன்புற்றிருப்போமாக.